குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியிலிருந்து நடைபெற்று வருகின்றது. நொடிக்கு நொடி முன்னணி நிலவரங்கள் மாறி வருகிறது. குஜராத்தில் முதலில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் அதன்பின் காங்கிரஸ் முன்னிலை பெற்றது. ஆனால் அதன்பின் பாஜக முந்திக் கொண்டது. இதனால் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமை மாறி மாறிவருதை அறிந்த தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளனர். ஒருவேளை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவர்கள் தயாராகி வருகின்றனர்.
காலை 9:00 மணி நிலவரப்படி, குஜராத்தில் காங்கிரஸ் 85 தொகுதிகளிலும், பாஜக 80 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஆனால் தற்போது 9:45 மணி நிலவரப்படி, பாஜக 96 தொகுதிகளிலும், காங்கிரஸ் 82 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.