“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கோவை உக்கடம் ஜி.எம். நகர் பகுதியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள கேரளா ஸ்டோரி படத்திற்கு இஸ்லாம், ஜமாத் அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், எந்த படமும் எந்த மதத்தையும் புண்படுத்த கூடாது என்பதால் கடந்த அதிமுக ஆட்சியில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமிய அமைப்புகள் குறித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டதை சுட்டிக்காட்டி, அதே போல கேரளா ஸ்டோரி படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரும் குறிப்பிட்ட பட காட்சிகளைத் தற்போது உள்ள அரசு நீக்கிவிட்டு வெளியிட வேண்டும் என்றார்.
அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ''தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறது. இதனை பிரதமர் அவர்கள் ஆதரிப்பது, அவர் அப்படத்தின் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ என்று எண்ண வைக்கிறது. இப்படத்தைத் திரையிடுவதற்கு தமிழ்நாட்டில் காவல் துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
உடனே இதற்கு தடை விதிக்க வேண்டுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``கர்நாடகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தின் போது, பிரதமர் மோடி ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பேசியிருப்பது சரியல்ல. குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரான இந்த படத்தை பிரதமரே ஆதரித்துப் பேசுவது வேதனையாக இருக்கிறது. தேர்தல் சமயத்தில் இது போன்ற சர்ச்சையான படங்களை வெளியிடுவது எவ்விதத்திலும் சரியாக இருக்காது. இதுபோன்ற படங்களை எடுக்கும் போதே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை விடுத்து, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும் இப்படங்களை ஆதரிப்பது தவறு. இதைத் தான் பாரதிய ஜனதா கட்சியும், பிரதமர் மோடியும் செய்து கொண்டிருக்கிறார்கள். பயங்கரவாதச் செயல்களைச் செய்து வருவதே உங்கள் (பாஜக) கட்சி தான்” எனக் கடுமையாக சாடினார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஸ்கை வாக், ஐநாக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கும் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.
இதனையொட்டி, இன்று முதல் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் திரையிடலை தமிழ்நாடு முழுக்க நிறுத்துவதாக அறிவித்திருக்கின்றன திரையரங்க உரிமையாளர்கள்.