“மதுரை ரயில் நிலையத்தை, விமான நிலையம் போல அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளோம்” என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், வருடாந்திர ஆய்வாக இன்று மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது பராமரிப்பு பணிகள், பயணச்சீட்டு வழங்கும் இடம், ரயிலின் பராமரிப்பு, ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து அவரிடம் புதுப்பிக்கப்படும் மதுரை ரயில் நிலையத்தின் வரைவுத் திட்டத்தை ரயில்வே அதிகாரிகள் விளக்கிக் கூறினர். அதனை கேட்டறிந்த அவர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “மதுரை ரயில் நிலையம் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அதற்கு என் பாராட்டுகள். மதுரை ரயில் நிலையத்தை அதிநவீன வசதிகளுடன் விமான நிலையத்திற்கு இணையாக புதுப்பிக்க டிசம்பர் மாத இறுதியில் டெண்டர் விடுவதற்கான பணிகள் தொடங்கும். அந்தப்பணிகள் டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3ஆண்டுகளில் நிறைவடையும். பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி மார்ச் 22-க்குள் நிறைவடையும்.
தற்பொழுது பெரும்பான்மையான விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஓமைக்ரான் பரவல் மற்றும் பாதிப்புகளை பொறுத்து பயணிகளை ரயிலை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும். இவற்றுடன் மதுரை-திருநெல்வேலி இருவழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.
ஆய்வின்போது பொது மேலாளருடன் முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, முதன்மை ரயில் இயக்க மேலாளர் ஸ்ரீ குமார், முதன்மை பொறியாளர் பிரபுல்ல வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். ரயில் இயக்கம், வர்த்தகம், சிக்னல், மருத்துவமனை மின்மயமாக்கல் பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறந்த பணியினை பாராட்டி குழு விருது வழங்கி கௌரவித்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள சென்றார் அவர்.