சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகளாக மாறி வரும் ரயில் பெட்டிகள்

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகளாக மாறி வரும் ரயில் பெட்டிகள்
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக தனி வார்டுகளாக மாறி வரும் ரயில் பெட்டிகள்
Published on

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. மேலும், பலருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. அப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கூடுதலான இருக்கைகள் தேவைப்படும். அதனைக் கருத்தில் கொண்டு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மாற்றங்களை கொண்டு வர ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ஒன்பது கேபின்கள் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முதலில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு கேபினுக்கு இரண்டு நோயாளிகளை தனிமைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெட்டிகளில் ரயில்வே துறை பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளது. பெட்டியின் இரண்டு பக்க கதவுகளின் அருகே இருக்கும் மறைப்பு பலகையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பக்கங்களும் உள்ள இந்திய பாணியிலான கழிவறையை குளியலறையாக மாற்ற உள்ளனர். கை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு அங்கு வாளி, குவளை, சோப் உள்ளிட்டவை வை‌க்கப்படும் எனத் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டியில் நடுவில் உள்ள படுக்கை மற்றும் மேலே ஏறுவதற்கு பொருத்தப்பட்டுள்ள இரும்பினால் ஆன படிகளை நீக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மருத்துவ சாதனங்களை வைப்பதற்கான இடம் ஒவ்வொரு கேபினிலும் உருவாக்கப்படும் என்றும், மொபைல், லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி தொடர்ந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 வோல்ட் பிளக் பாயின்ட் ஒவ்வொரு கேபினிலும் பொருத்தவும், நோயாளிகளை தனிமைப்படுத்த இரண்டு படுக்கைகளுக்கு நடுவே பிளாஸ்டிக் திரைச்சீலை அமைக்கவும் ரயில்வேதுறை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து, நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை ஆராயும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ரயில்வே அமைச்சகம் சார்பில் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையிலும் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டாய்லெட்கள் அனைத்து பாத்ரூம்களாக மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மிடில் பர்த் இருக்கைகள் நீக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com