தமிழ்நாடு
கச்சா எண்ணெய் கலந்த விவகாரம்... தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்குபதிவு!
பக்கிங்காம் கால்வாயில் கலந்த கச்சா எண்ணெய் கலந்தது தொடர்பாக செய்தி வெளியான நிலையில், அதுகுறித்து தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்துள்ளது.
பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்த நிலையில், அது வெள்ளநீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்து வருவது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்து இருந்தது. அதில், “ஆய்வுக்குழு எண்ணெய் மாதிரிகளை பரிசோதனை செய்ததில், அவை மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்தது. மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கச்சா எண்ணெயும் கலந்துள்ளது” என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வெள்ளநீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் உடல்நல பாதிப்பு என மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு அதிகரிக்க தொடங்கவே தென்மண்டல பசுமைத்தீர்ப்பாயம் தானாக முன்வந்து இந்த விவகாரத்திற்கு எதிராக தற்போது வழக்குபதிவு செய்துள்ளது.