விழுப்புரத்தில் வரும் 27ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதனை வரவேற்கும் விதமாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்டோருக்கு 35 அடி உயரத்தில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டின் நுழைவு வாயிலில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை போன்ற வடிவம் மஞ்சள் நிறத்தில் வைக்கும் பணி நடைபெற்றுகிறது.
அரசியல் கட்சி மாநாடு என்பதால் எந்தெந்த தலைவர்களின் படங்கள் வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கட்சி லெட்டர் பேடில் உள்ளது போல் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருக்கு வரிசையாக பெரிய அளவில் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. அருகில் விஜய்க்கும் கட் அவுட் வைக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, மாநாட்டில் தென்னகத்தின் ஜான்சி ராணி என அழைக்கப்பட்ட அஞ்சலையம்மாள் மற்றும் வேலுநாச்சியாருக்கும் கட் அவுட்கள் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தனது 9 வயது மகளுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் அஞ்சலையம்மாள்.
மகாத்மா காந்தியடிகளால் தென்னாட்டு ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? அவர்தான் கடலூரைச் சேர்ந்த அஞ்சலையம்மாள். புதுச்சேரியில் மகாகவி பாரதியார் தங்கியிருந்தபோது தமிழ்நாட்டுக்குள் அவர் நுழைந்தால் கைது செய்யப்படலாம் என்ற சூழலில் அவர், மாறுவேடத்தில் கூண்டுவண்டியில் வந்து பார்த்த போராளி அஞ்சலையம்மாள்.
1890 ஆம் ஆண்டு பிறந்தவரான அஞ்சலை, 1921ம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியபோதே தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார். விடுதலைப் போராட்டத்திற்காக நிலம், சொத்துகளை விற்றவர் இந்த வீரப்பெண்மணி. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தனது 9 வயது மகள் அம்மாகண்ணுவுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியடிகளே சிறையில் வந்து பார்க்க விரும்பிய போராட்ட வீராங்கனைகளாக அஞ்சலையம்மாளும், அம்மாகண்ணுவும் இருந்தனர். 1932 ஆம் ஆண்டு, போராட்டத்தில் பங்கேற்று சிறைசென்றபோது அஞ்சலையம்மாள் நிறைமாத கர்ப்பிணி. அப்போது பெற்றெடுத்த தனது மகனுக்கு ஜெயில் வீரன் என பெயரிட்டார். பிறந்து இருவாரமே ஆன குழந்தையுடன் மீண்டும் சிறைத்தண்டனையை ஏற்றார். சுதந்திரத்திற்குப்பின், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவையாற்றிய இந்த வீராங்கனையின் வாழ்க்கை விடுதலை போராட்டத்தில் தவிர்க்க முடியாத அத்தியாயம்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமையை கொண்டவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி - முத்தாத்தாள் நாச்சியாரின் ஒரே மகளாக பிறந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். இளம் வயதிலேயே குதிரையேற்றம், வாள் வீச்சு, களரி உள்ளிட்ட போர்க்கலைகளை கற்று யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரத்தோடு திகழ்ந்தார். 1746ல் சிவகங்கை இளைய மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து ராணியானார் வேலு நாச்சியார். 1772ம் ஆண்டு காளையார்கோவிலில் ஆங்கில படைத்தளபதிகள் ஸ்மித், பாஞ்சோர், ஆகியோரால் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆங்கிலேய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேலுநாச்சியார் சூளுரைத்தார்.
விருப்பாச்சி கோபால்நாயக்கரிடம் அடைக்கலம் அடைந்த அவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களை ஒருங்கிணைத்தார். மேலும், ஹைதர் அலி அளித்த காலாட்படை, குதிரைப்படைகள் மூலம் 7 ஆண்டுகளுக்கு பின்பு சிவகங்கை சீமையை வெற்றிக்கரமாக மீட்ட வீரமங்கை வேலுநாச்சியார், 1780-ம் ஆண்டு ராணியாக முடிசூட்டப்பட்டார். 1780 முதல் 1789 வரை நல்லாட்சி புரிந்த அவர், 1796-ம் ஆண்டு தனது 66வது வயதில் மரணமடைந்தார்.