நடந்தது என்ன? திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்!

நடந்தது என்ன? திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்!
நடந்தது என்ன? திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் கைதான பெண் திடுக்!
Published on

திருச்சி கலெக்டர் பி.ஏ கொலையில் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறிவந்த பெண், இப்போது தன் கண்முன்னால் யாரோ ஒருவர் கொலை செய்ததாகக் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை கலெக்டரின் பி.ஏவாக பணிபுரிந்து வந்தவர் பூபதி கண்ணன். இவர் மனைவி அனுராதா. பூபதி கண்ணன் திருச்சியில் இருந்து காரில், புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் சென்று வருவது வழக்கம். கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல காரில் புறப்பட்ட அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மாத்தூர் அருகே சரமாரியாக வெட்டப்பட்டு சடலமாகக் கிடந்தார். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 அவரது காரில் இருந்து மதுப்பாட்டில்களையும், பெண்ணின் உள்ளாடையையும் பறிமுதல் செய்தனர். பூபதி கண்ணனின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போலீசார், அவர் ஒரு பெண்ணுடன் நீண்ட நேரம் பேசி இருப்பதை கண்டறிந்தனர். அந்த பெண் அவருடன் புதுக் கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் சவுந்தர்யா என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரித்தபோது பல திடுக் தகவல்கள் வெளியாயின.

சவுந்தர்யா, லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரைச் சேர்ந்தவர். இவர் கணவர் சுரேஷ் குளித்தலையில் வேளாண்மை துறையில் பணி யாற்றி வந்தார். சவுந்தர்யா திருமணத்திற்கு முன்பு ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் அது தொடர்ந்துள்ளது. விஷயம் சுரேஷூக்கு தெரியவர அவர் கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்குள் பிரச்சினை. இதில் ஏற்பட்ட விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் கருணை அடிப்படையில் சவுந்தர்யாவுக்கு வேளாண்மை துறையில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தது.

இதையடுத்து அவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்தார். முன்னாள் காதலன் அவருக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்துள்ளார். சவுந்தர்யாவுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில்தான் சவுந்தர்யாவுக்கு பூபதி கண்ண னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் பின் நெருக்கமானது.

 பூபதி கண்ணன், தினமும் புதுக்கோட்டைக்கு காரில் செல்லும்போது, சவுந்தர்யாவையும் அழைத்து சென்றார். இது சவுந்தர்யாவின் பழைய காதலனுக்கு தெரிய வந்ததும் கொதித்தார். அவர் பூபதி கண்ணனை எச்சரித்தார். அதையும் மீறி காதலைத் தொடர்ந்தார் சவுந்தர்யா. ஒரே நேரத்தில் அவர் இரண்டு பேரிடமும் பழகி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 27 ஆம் தேதி இருவரும் காரில் செல்வதைத் தெரிந்துகொண்ட சவுந்தர்யாவின் காதலன், கூலிப்படை மூலம் பூபதி கண்ணனை தீர்த்துக் கட்டியுள்ளார் என்று கூறப்பட்டது. இந்த கொலையில் சவுந்தர்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் போலீசாரில் சவுந்தர்யா கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

ஒரே அலுவலகம் என்பதால் பூபதிகண்ணனுடன் நட்பு ஏற்பட்டது. அவரிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். பின்னர் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது. தினமும் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு அவர் காரில் செல்வேன்.  வீட்டுக்குத் திரும்பும் போது, மாத்தூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் காரை நிறுத்தி உல்லாசமாக இருப்போம்.

பின்னர் மாத்தூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, வீடு திரும்பி விடுவேன். கடந்த 27 ஆம் தேதி மாலை வழக்கம் போல திரும்பி கொண்டிருந்தோம். அப்போதும் அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றோம். நெருக்கமாக இருந்தோம். பின் பூபதிகண்ணன் காரில் இருந்து இறங்கி சிறுநீர் கழிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் கத்திக்குத்து காயங்களுடன் அலறியபடி ஓடிவந்தார். நானும் அலறினேன். அப்போது அவரை பின்தொடர்ந்து கையில் கத்தியுடன் வந்த ஒருவர், கத்தியை என் கையில் கொடுத்து, நீயும் குத்து என்று மிரட்டினான். இதனால் நானும் குத்தினேன். 

பின் கத்தியை வாங்கிய மர்மநபர் மீண்டும் அவரை குத்திவிட்டு ஓடிவிட்டான். பூபதி கண்ணன், கார் அருகில் சரிந்து விழுந்தார். நான் பயந்து போய், அவர் கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன். அவரை குத்தியவர் யார் என்று தெரியாது.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேலும் விசாரணை நடத்தினால் பல திடுக் தகவல்கள் வெளிவரலாம் என போலீசார் நினைக்கின்றனர். இதனால் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com