சென்னையில் மெட்ரோ ரயில் பயண அட்டையை பயன்படுத்தி இனி விரைவில் பயணிகள், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளிலிருந்து உணவு பண்டங்களை வாங்கலாம்.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், விரைவான போக்குவரத்திற்காகவும் சென்னையில் தொடங்கப்பட்டது தான் மெட்ரோ ரயில் சேவை. அலுவலகத்திற்கு செல்வோர், பொதுமக்கள் என நாள்தோறும் பலர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணம் செய்வதற்கு ஏதுவாக பயணிகளுக்கு மெட்ரோ பயண அட்டையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மெட்ரோ பயண அட்டையை பயன்படுத்தி, இனி விரைவில் ரயில் நிலைய வளாகங்களிலுள்ள கடைகளில் பயணிகள் உணவு பொருட்களை வாங்கலாம். விரைவில் இந்தச் சேவை அமலுக்கு வர உள்ளது. பயணிகளுக்கு நேர விரயத்தை குறைக்கும் வகையில் இந்தச் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
முன்னதாக மெட்ரோ ரயில் பயண அட்டை மூலமாக மட்டுமே பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் முறை ஜூலை மாதம் சோதனை முறையில் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் மெட்ரோ பயண அட்டை மூலமாக மட்டுமே இருசக்கர வாகன நிறுத்தத்திற்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. அதனால் மெட்ரோ பயண அட்டை இல்லாதவர்கள் சென்னை மெட்ரோ ரயில் நிறுத்த சேவை மையங்களிலோ அல்லது டிக்கெட் கவுண்டர்களிலோ பயண அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.