செய்தியாளர் - நவநீத கணேஷ்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் செருப்பு தைக்கும் தொழிலாளி நடுகாடான் (65). இவருக்கு 1 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், மகன் மணிகண்டனுக்கு துலுக்கன்குளத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார் நடுகாடான். இரண்டு மகள்களும் உள்ளூரில் வசிப்பதால், அவர்களுக்கும் தேவைப்படும்போதெல்லாம் பணம் கொடுத்து வந்துள்ளார் நடுகாடான்.
இதனால் ஆத்திரமடைந்த மகன் மணிகண்டன் தந்தையோடு சண்டையிட்டுள்ளார். இருவருக்குள்ளும் கடந்த சில நாட்களாக பிரச்னையும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தந்தையிடம் தன் சொத்துக்களை பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளார் மணிகண்டன்.
அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை கைகலப்பானதில், ஒரு கட்டத்தில் வீட்டின் முன்பு இருந்த பெரிய விறகு கட்டையை கையில் எடுத்த மணிகண்டன், தந்தை நடுகாடானை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த நடுகாடானை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மல்லாங்கிணறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் நடுகாடான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து சொத்தை பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று தந்தையை தாக்கி தலைமறைவான மகன் மணிகண்டனை மல்லாங்கிணறு போலீசார் வலை வீசி தேடினர். அதில் விருதுநகர் அருகே தலைமறைவாக இருந்த மணிகண்டனை 2 மணி நேரத்தில் மல்லாங்கிணறு போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக மகனே தந்தையை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.