கோவை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற உதவி ஆய்வாளரை குடிபோதையில் கொலை செய்த அவரது மகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கோவை இருகூர் அண்ணா நகரில் வசித்து வருபவர் சுப்ரமணியன் (70). காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுப்பெற்ற சுப்ரமணியன் தனது மனைவி, மகனுடன் வசித்து வந்தார். மகன் செந்தில்குமார் (42) குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியான வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், செந்தில்குமாரின் மனைவி பிரிந்து தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.
செந்தில்குமாரின் நடவடிக்கையால் அவ்வப்போது தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது நேற்று தந்தை- மகன் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், செந்தில்குமார் வீட்டிலிருந்த கத்தியால் சுப்ரமணியனைக் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வீட்டிற்கு திரும்பி வந்த சுப்ரமணியனின் மனைவி, கணவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சுப்ரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, தந்தை சுப்ரமணியனை கொலை செய்துவிட்டு வீட்டிலேயே கத்தியுடன் சோபாவில் அமர்ந்திருந்த மகன் செந்தில்குமாரை சிங்காநல்லூர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், குடிபோதையில் கொலை செய்தது தெரியவந்துள்ளது.