பெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி

பெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி
பெற்றோரை ஏமாற்றி வீட்டை வாங்கிய மகன் - பத்திரப் பதிவை ரத்து செய்த அதிகாரி
Published on

புதுச்சேரியில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்களை பிடுங்கிக் கொண்டு, மகனே பெற்றோரை விரட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

புதுச்சேரி கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த சங்கரதாஸ் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ராஜ்மோகன், சவீதா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனது வாழ்நாள் சேமிப்பை வைத்து வீடு ஒன்றை கட்டிய சங்கரதாஸ், அதில் எஞ்சிய காலத்தை தனது மனைவி மற்றும் மகன் குடும்பத்தோடு வாழ விரும்பினார். ஆனால், தனது நிம்மதியை கெடுக்க, தனது ஒரே மகனே வில்லனாக வந்து சேர்வார் என சங்கரதாஸ் நினைத்திருக்கமாட்டார். 

வங்கியிலிருந்து கடன்பெறுவதற்கு வீட்டுப் பத்திரம் உத்தரவாதமாக தேவைப்படுவதால், அதை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு தந்தையிடம் கூறியுள்ளார் ராஜ்மோகன். தனக்குப் பின் எல்லாம் மகனுக்குத் தானே என நினைத்த சங்கரதாஸ், அடம்பிடிக்கும் குழந்தைக்கு மிட்டாய் வாங்கித் தருவதைப் போல், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை 2016ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்துவிட்டார். சொத்தை பிடுங்கிக் கொண்ட பின்னர்தான், ராஜ்மோகனின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்தது. கொஞ்சம், கொஞ்‌சமாய் தொல்லை கொடுக்க ஆரம்பித்த ராஜ்மோகன், இறுதியில் தாய், தந்தை இருவரையும் வீட்டை விட்டே விரட்டிவிட்டார்.

பெற்ற மகனே தங்களை ஏமாற்றி நடுத்தெருவில் நிறுத்தியதைக் கண்டு முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீர்ப்பாயத்தில் தந்தையும், தாயும் புகார் அளித்துள்ளனர். தீர்ப்பாயத்தில் சொத்தை திருப்பித்தர ராஜ்மோகன் மறுத்துவிட்டார். இதையடுத்து விசாரணை நடத்திய துணை மாவட்ட ஆட்சியர் சுதாகர், தனது மகனுக்கு சங்கரதாஸ் எழுதிக் கொடுத்த வீட்டுப் பத்திரத்தையே ரத்து செய்து உத்தரவிட்டா‌ர். பெற்ற மகனால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு, நீதி பெற்றுத் தந்த புதுச்சேரி துணை ஆட்சியரின் நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

தங்கள் மகன் ஏமாற்றியது தொடர்பாக பேசிய பெற்றோர், "இதைப்போல் இனி யாரும் செய்யக்கூடாது. நாங்கள் எவ்வளவு ஆசை ஆசையாய் வளர்த்திருப்போம். அவனுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும்” மன வேதனையுடன் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com