திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன் பட்டணத்தில் உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வருபவர் கல்யாண் குமார். அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் சுப்பு லக்ஷ்மி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் ராகவேந்திரா சென்னையில் பணி செய்து வருகிறார் .
இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்றால் கல்யாண்குமாரின் குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அனைவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சுப்பு லக்ஷ்மி மட்டும் சிகிச்சை பலனின்றி அட்சய திருதியை நாளில் உயிரிழந்துள்ளார். சென்னையில் பணி புரிந்த ராகவேந்திரா தன் தாயுடன் வசிக்கலாம் என்ற ஆசையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் வைத்து பணிபுரிய நிறுவனம் அனுமதி அளித்ததை மகிழ்வுடன் ஏற்ற ராகவேந்திராவுக்கு தாயின் இறப்பு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தாய் உயிரோடு இருக்கும் காலத்தில் அவரை அன்புடன் பராமரிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் மனதில் இருந்துவந்த நிலையில், அவருக்கு கோயில் கட்டும் எண்ணம் எழுந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் இறந்த தாயின் அஸ்தியை பத்திரப்படுத்திய ராகவேந்திரா தன் தாயின் பெயரில் அமைந்துள்ள சுப்புலக்ஷ்மி கார்டன் பகுதியில் அஸ்தியை புதைத்து அதன்மேல் கோயிலும் கட்டியுள்ளார்.
தீவிர சிவ பக்தையான இவரது தாயின் ஞாபகமாக அக்கோயிலில் சிவ லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார். மேலும் இக்கோயிலில் பல்வேறு தெய்வ உருவப் படங்களையும் வைத்துள்ளார். தாய் இறந்த அட்சய திருதய நாளில் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் செய்துள்ளார். தாயின் மேல் மகன் கொண்ட அன்பையும் பாசத்தையும் கண்ட சுற்று வட்டார பகுதி மக்கள் ஆச்சர்யத்துடனும் பய பக்தியுடனும் தாய்க்கு மகன் எழுப்பிய கோயிலை வழிபட்டு செல்கின்றனர்.
தாய் மீது மகன் கொண்ட அளவு கடந்த அன்பினால் தாய் இறந்த பின்னர் மகன் கோயில் எழுப்பிய சம்பவம் இப்பகுதியில் பலத்த வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.