கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அரசு கோப்புகளை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு அப்பகுதி கிராமங்களின் அரசு பதிவேடுகள், சிட்டா அடங்கல் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த சிலர், இந்த அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருள்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஆவணங்களை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அசாருதீனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட காவல் துறையினர் தீயை அணைத்தனர். இதில் நாகக்குடி கிராம மக்களின் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.