திண்டுக்கல் குடைபாறைப்பட்டியில் தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடைபெற்றது. இதில் இந்து முன்னணியினரைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடையை மீறி குடைபாறைப்பட்டி பள்ளிவாசல் வழியாக அச்சிலை எடுத்துச் செல்லப்படுவதையறிந்து காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த சிலையை காவல்துறையினரே அங்குள்ள கோட்டைகுளத்தில் கரைக்க எடுத்துச் சென்றனர்.
இதனையடுத்து, தடையை மீறி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்ற பெண்கள் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்னையையடுத்து, பள்ளிவாசல் வழியாக இந்து முன்னணியினர் சிலைகள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்நிகழ்வு நடைபெறுவதால் இதற்கு போலீஸ் விநாயகர் என்றே அக்கிராம மக்கள் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.