ஆர்வத்தோடு கொரோனா தடுப்பூசி செலுத்தவரும் பொதுமக்களுக்கு அலைக்கழிக்காமல் தடையின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிய நிலையில் கடந்த நான்கு ஐந்து நாட்களாக தடுப்பூசி செலுத்தும் பணி தடைபட்டது. இதையடுத்து நேற்று தடுப்பூசிகள் வந்த நிலையில், மீண்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை முதலே மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். ஆனால், டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்து 4 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர், நேற்று ஒரே நாளில் 7119 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1780 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது இன்று 19,940 டோஸ் கையிருப்பில் உள்ளது. கோவிஷீல்டு முதல் மற்றும் 2வது தவணையும், கோவாக்சின் 2வது தவணையும் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 90 நிரந்தர முகாம்களிலும் 7 சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் காலை முதல் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காதிருப்பதால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியானது. அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையாக தடுப்பூசி செலுத்தி மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்: சேலம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் 200 நபர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திக் கொண்டு டோக்கன் வாங்க முற்பட்டனர். மேலும் டோக்கன் வழங்கும் நபரை துரத்திச் சென்று டோக்கன் வாங்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்ளே நுழைய பொதுமக்கள் முற்பட்டதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில்வந்து பொதுமக்களிடம் பேசி சமரசம் செய்தார். பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நின்று செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினர்.
மதுரை - உசிலம்பட்டி: ஒரு வாரம் கழித்து மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினசரி தலா 10 குப்பிகள் வீதம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இன்று தடுப்பூசி வந்தது. இந்த சூழலில் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசிகளை செலுத்த நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்ட நெரிசல் காரணமாக கொரோனா பரவல் ஏற்படும் அச்சம் ஒரு புறம் இருந்தாலும் போலீசாரை பயன்படுத்தி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் அரசு ஒரு முடிவை அறிவிக்க வேண்டும். அதாவது கையிருப்பில் உள்ள தடுப்பூசி அளவை எழுதிவைக்கலாம், அதேபோல அடுத்தநாள் செலுத்த வேண்டிய தடுப்பூசிகளுக்கு டோக்கன்களை முதல்நாளே கொடுக்கலாம். இதனால் டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே முகாமிற்கு வர வாய்ப்புள்ளது. இதன்மூலம் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
குறைவான தடுப்பூசி உள்ள மையங்களில் கூட்டம் அதிகமாக வரும்போது தனக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் வருகின்றன. இதையெல்லாம் சரி செய்து ஆர்வத்தோடு வரும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொரோனா ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.