தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நாள்தோறும் காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தேசியக் கொடியை ஏற்றி இறக்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக அலுவலகத்தில் ஏற்றப்படும் தேசிய கொடி சாயம் போன நிலையில் இருந்தும் ஏற்றி பறக்க விட்டு வருகின்றனர்.
இந்த தேசியக் கொடி ஜனவரி 26 குடியரசு தின விழா அன்று புதிதாக மாற்றப்பட்ட நிலையில், அதன் சாயம் வெளுத்துப்போன பின்பும் கொடியை மாற்றாமல் அதே கொடியை ஏற்றி வருகின்றனர். இதுபோல் சாயம் போன தேசியக் கொடியை பறக்க அவமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக தேசிய கொடியை மாற்றி பறக்க விட்டால் இதுபோன்று சாயம் போன நிலையில் உள்ள தேசியக் கொடி பறக்க விடுவதை தவிர்க்கலாம். ஆனால், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தேசியக் கொடியின் நிலையை கண்டு கொள்ளாமல் நாள்தோறும் பணிக்கு வருவதும் போவதுமாக இருப்பது வேதனை அளிப்பதோடு தேசியக் கொடியை அவமதிக்கும் செயலாகும் என சமூக ஆர்வலர் சதீஸ் வேதனை தெரிவித்தார்.
சாயம் போன நிலையில் தேசியக் கொடி ஏற்றப்படுவது குறித்து நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் கேட்டதற்கு உடனடியாக மாற்றம் செய்து புதிய தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.