“இதோ..எங்க குடும்ப கடன் ரூ.2.63 லட்சம்”.. காசோலையுடன் வந்து ‘ஷாக்’ கொடுத்த காந்தியவாதி

“இதோ..எங்க குடும்ப கடன் ரூ.2.63 லட்சம்”.. காசோலையுடன் வந்து ‘ஷாக்’ கொடுத்த காந்தியவாதி
“இதோ..எங்க குடும்ப கடன் ரூ.2.63 லட்சம்”.. காசோலையுடன் வந்து ‘ஷாக்’ கொடுத்த காந்தியவாதி
Published on

தமிழக நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையின் படி தனது குடும்ப கடன் 2 இலட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய்க்கான காசோலையை அதிகாரிகளிடம் வழங்க முற்பட்ட நாமக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் 2020 - 21 ஆண்டின் "வெள்ளை அறிக்கை" மூலம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த கடனை அடைக்க நாமக்கல் மாவட்டம் செல்லப்பம்பட்டி ஊராட்சி மேற்குபாலபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் நிறுவனருமான ரமேஷ் தியாகராஜன் தனது குடும்பத்திற்கான பங்கினை, அதாவது 2,63,976 ரூபாய்க்கான தொகையை காசோலையை நாமக்கல் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து வழங்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது வருவாய் கோட்டாட்சியர் கோட்டைகுமாரை சந்தித்த போது அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட அறிவுறுத்தினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அவர்களை சந்தித்து வழங்கிட சென்றார். அங்கு ஆட்சியர் இல்லாத நிலையில் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின் காசோலையை வழங்காமல் ரமேஷ் திரும்பி சென்றார்.

இதுகுறித்து ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில் “தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தமிழக அரசின் கடனை முழுவதுமாக அடைக்க வேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இது ஒரு முன்னோட்டமாக அமையும் என்பதற்காக தனது குடும்பத்திற்கான கடன் தொகையை காசோலையாக வழங்க உள்ளேன். கடனாக நிலுவையில் உள்ள பதிவேட்டின் நகலையும் எனக்கு தரவேண்டும்.

இந்த கடனை செலுத்த முன்வரும் வசதியற்ற வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு ரூ 15 லட்சம் குடும்ப கடனாக மீண்டும் கொடுத்து குடும்பமாக சேர்ந்து சுயதொழில் செய்து, தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், தனி நபருடைய வருமானத்தை பெருக்கி, வறுமையையும், ஏழ்மையையும், போக்குவதற்கு கோரிக்கையையும் முன் வைத்து இந்த தொகையை வழங்குகிறேன். இந்த தொகையை எனது குடும்பத்தின் சார்பாக வழங்குகிறேன்” எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com