பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக கூறி போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக செயற்பட்டாளர் சுந்தரவள்ளி வலியுறுத்தியுள்ளார்.
தமுஎகச அமைப்பின் மாநிலத் துணை செயலாளரும், பேராசிரியருமான சுந்திரவள்ளி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “நான் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக தளத்தில் பெண் விடுதலை தொடர்பாகவும், சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் என்னைக் குறித்து மிக இழிவான சொற்களைக் கொண்டு ஆபாசப் படங்களுடன் எனது முகத்தை ஒட்டி வன்மப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.
நான் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டதாக பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயரில் போலியான செய்தியை சிலர் பரப்பியுள்ளார்கள். எனது பொதுவாழ்க்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய செயலாக இது உள்ளது. போலியான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.