சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம், மணல் கடத்தலுக்கு எதிரான போராட்டம் எனப் பல்வேறு போராட்டங்களின் முன்னணியில் இருந்து செயல்பட்டவர் சமூக ஆர்வலர் முகிலன். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சில ஆதாரங்களை வெளியிட்டார்.
செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர், மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் சென்ற முகிலனை காணவில்லை என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆன நிலையில் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், முகிலனை கண்டுபிடித்து தரக் கோரி பல்வேறு தரப்பினும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், முகிலன் காணாமல்போன வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 15ம் தேதி முகிலன் காணாமல் போனது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.