பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் அசோக். பட்டதாரி இளைஞரான இவர், பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று நெய்க்காரப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வருவாயத் துறையினரால் போலீஸ் பாதுகாப்புடன் மீட்கபட்டது. அரசு நிலத்தை மீட்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற அசோக் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்று வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில் பிணையில் வெளிவந்த அசோக், “என்னை டிஎஸ்பி சரவணன் கடுமையாக தாக்கி ரத்தக்காயப்படுத்தி உள்ளார். நான் சமூகப் பணியில் ஈடுபடுவதாலும் டிஎஸ்பி சரவணன் மாமுல் வாங்குவதற்கு நான் இடையூறாக இருந்து வருவதாலும், என் மீது வன்மத்துடன் நடந்து கொண்டார். மேலும் ஜாதியை சொல்லி திட்டி அடித்தார்” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் “எனக்கு ஏற்பட்ட காயத்திற்கு பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கக்கூட விடாமல் தடுத்தார். தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு டிஎஸ்பி சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டு வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
டிஎஸ்பி மீது சமூக ஆர்வலர் குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்ட சம்பவம் பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.