மயிலாடுதுறை: குடிசை வீட்டில் வாழ்ந்த ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர்

சீர்காழி அருகே குடிசை வீட்டில் வாழ்ந்த ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு ரூ 2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்த சமூக ஆர்வலர். புத்தாடை வழங்கி உணவுப் பொருட்கள் கொடுத்து புதுமனை புகுவிழாவும் நடத்தி வைத்தார்.
புதுமனை புகுவிழா
புதுமனை புகுவிழாpt desk
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன். வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த இளைஞரான பாரதி மோகன் இப்பகுதியில் உள்ள ஆதரவற்ற, மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களின் நிலை குறித்து அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சமூக ஆர்வலராக தன்னை மாற்றிக் கொண்டார்.

இதையடுத்து வெளிநாட்டு வேலையை விட்டு சொந்த ஊர் திரும்பிய அவர், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பேருந்து நிலையம், மற்றும் ஆதரவற்று சாலையில் திரியும் நபர்களை கண்டறிந்து உணவு வழங்கும் பணியை துவங்கினார்.

New house
New housept desk

இவரது சேவையை உணர்ந்த நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதரவோடு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். குறிப்பாக ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்குவதுடன் மனநலம் குன்றி சாலையில் சுற்றித் திரிவோர்களுக்கு முடி திருத்தம் செய்து, புத்தாடைகள் அணிவித்து அவர்களின் நிலையை மாற்றி வருகிறார்.

இவரது சமூக சேவையின் ஒரு படியாக ஆதரவற்று ஏழ்மை நிலையில் வாழும் முதியோர்களுக்கு சமூக வலைதள நண்பர்களின் உதவியுடன் வீடுகளும் கட்டி வழங்கி வருகிறார்.

புதுமனை புகுவிழா
கைவிட்ட நிறுவனம்; சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாஞ்சோலைக்கு கண்ணீருடன் விடை கொடுத்த பெண்கள்!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் இடிந்துபோன குடிசையில் வசித்த ஆதரவற்ற மூதாட்டிகளான பூபதி அவரது மகள் கலைச்செல்வி ஆகியோர் நிலை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அப்பதிவை கண்ட பாரதி மோகன் சென்னிநல்லூர் கிராமத்திற்கு நேரில் சென்று மூதாட்டிகளின் நிலையை அறிந்து அவர்களுக்கு புதிய வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து தன்னுடைய சக நண்பர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் பங்களிப்போடு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் பாதுகாப்பான புதிய வீட்டை கட்டி முடித்தார்.

அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் மூதாட்டிகள் பூபதி மற்றும் கலைச் செல்வியிடம் கிராமத்தினர் முன்னிலையில் இன்று புதிய வீட்டை பாரதி மோகன் ஒப்படைத்தார். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன் அவருக்கு புத்தாடைகள் வழங்கி, உணவு பொருட்கள் கொடுத்து புதுமனை புகு விழாவையும் நடத்தியுள்ள இளைஞர் பாரதி மோகனின் முயற்சியை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து பாரதி மோகன் கூறுகையில்… நண்பர்கள் மற்றும் சமூக வலைதள நண்பர்கள் உதவியுடன் இதுவரை தமிழகம் முழுவதும் 8 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். மேலும் அதரவற்றவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தேவையான உணவு பொருட்களையும் வழங்கி வருகிறோம். ஆதரவற்றோர் எங்கிருந்தாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்து தருவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com