தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவ மூர்த்தியின் வீட்டின் பின்புறம், தோண்ட தோண்ட எலும்புகள் வந்துகொண்டுள்ளன.
சோழபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அசோக் ராஜன் என்பவர் கடந்த 13ஆம் தேதி மாயமானார். இவர் கடைசியாக சந்தித்த நபர் கேசவமூர்த்தி என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் கேசவ மூர்த்தியை காவல்துறை விசாரித்தது. அதன்பின் அசோக் ராஜன் எழுதிய கடிதம் என கடிதமொன்று, ஒரு சில நாட்களில் காவல்துறைக்கு கிடைத்தது. அதில் தனக்கு ஆண்மை குறைவு இருப்பதால் வாழ பிடிக்கவில்லை என அசோக் ராஜன் தெரிவித்திருந்தார். இதையே கேசவமூர்த்தியும் காவல்துறை நடத்திய விசாரணையின் போது கூறியிருந்தார்.
இந்த ஒற்றுமையான தகவலால் எழுந்த சந்தேகத்தின் பேரில் கேசவ மூர்த்தியிடம் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் முடிவில், ‘திருமணத்தின் மீதான ஈடுபாடு இல்லாமல் தனது இரண்டு மனைவிகளையும் விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் கேசவமூர்த்தி, அப்பகுதி இளைஞர்களுக்கு அதிகளவில் செலவுகள் செய்து, அவர்களை தன்னுடன் அதிக நேரம் செலவிட வற்புறுத்தி வந்துள்ளார்.
அப்படி அறிமுகமான அசோக் ராஜனை தனது பாலியல் தேவைக்கு உட்படுத்தும் நோக்கில் அதிக போதை மருந்து கொடுத்துள்ளார். இதில் அசோக் ராஜன் உயிரிழந்துள்ளார்’ என்பது தெரியவந்தது.
மேலும், அசோக் ராஜன் உடலை வெட்டி தனது வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாக காவல்துறையினர் விசாரணையில் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதேபோல், முகமது அனஷ் என்பவரையும் கடந்த 2021 ஆம் ஆண்டு கொன்று புதைத்தாக திடுக்கிடும் தகவலையும் கேசவமூர்த்தி வாக்குமூலத்தில் கூறினார்.
இதனையடுத்து, கேசவ மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், அவரது வீட்டின் பின்புறத்தில் குழி தோண்டி ஆய்வு செய்தனர். அப்போது அதில், மேலும் சில மனித எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன. அவைகள் முகமது அனஷின் எலும்புகளா? அல்லது வேறு யாருடையதுமா? என்பதை அறிய அந்த எலும்புகளை டி.என்.ஏ. ஆய்வுக்காக, மருத்துவ ஆய்வுக் கூடத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
சோபுவரம் பகுதியில் ஏற்கனவே மாயமான இளைஞர்களின் வழக்குகளையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.