இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு – இதுவரை நடந்தது என்ன?

தமிழ்நாட்டையே உலுக்கிய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், அது கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
kodanad case
kodanad casept desk
Published on

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கோடநாடு எஸ்டேட் இருந்தது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கிருந்த சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ், உதயன் உள்ளிட்ட 10 பேர் ஏப்ரல் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

accused
accusedpt desk

இதற்கிடையே ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும் 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி அங்கு பணியாற்றிய சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் தினேஷின் தாய், தந்தை மற்றும் அவரது சகோதரியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்விவகாரம் தொடர்பாக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி இவ்வழக்கை விசாரித்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் மற்றும் பொறுப்பு நீதிபதியாக இருந்த உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து புதிய நீதிபதியாக அப்துல்காதர் பொறுப்பேற்றுக் கொண்டார். 2023 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் தங்கிருந்த அறைகளில் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய ஆய்வில் சேகரிக்கப்பட்ட ஒன்பது வகையான பொருட்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைப்படத்தை நீதிபதி அப்துல் காதரிடம் தாக்கல் செய்தனர்.

accused
accusedpt desk

இந்நிலையில் கோடநாடு வழக்கு விசாரணை இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வர உள்ளது. இது வரும் போது, சிபிசிஐடி காவல் துறையினர் தரப்பில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com