விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் படையெடுத்த பாம்புகளால் பாடப்புத்தகம் வழங்கும் பணியின்போது பள்ளி மாணவ- மாணவிகள் பாம்புகளைக் கண்டு பதற்றம் அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும், இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணியும் தொடங்கி நடந்துவருகிறது. இந்த நிலையில், சிப்பிப்பாறை பள்ளியில் இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்கியபோது, பள்ளி வளாகத்திற்குள் திடீரென மூன்றுக்கும் அதிகமான மஞ்சள் சாரை மற்றும் நல்ல பாம்புகள் நுழைந்து விளையாடத் தொடங்கின.
பாம்புகளைக் கண்ட மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அச்சத்தில் பதறியடித்து கூச்சலிட்டனர். பின்னர் அருகில் உள்ள பள்ளிச் சமையலறை கட்டிடத்தின் அருகே அடுக்கப்பட்டிருந்த விறகு கட்டுக்குள் சென்று பாம்புகள் மறைந்துவிட்டன.
நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடிக்கிடப்பதாலும், துப்புரவுப் பணி செய்யாமல் உள்ளதாலும் பாம்புகளும் விஷப் பூச்சிகளும் அதிகமாக காணப்படுகின்றன. எனவே பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகத்தைத் தூய்மைப்படுத்தவேண்டும் என
பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.