பாம்பு கடித்து 3 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் உயிரிழப்புக்கு அரசு மருத்துவரின் அஜாக்கிரதையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
போச்சம்பள்ளி அடுத்த பழனியாண்டவர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சத்தியராஜ்-சந்திரலேகா தம்பதியினர். இவர்கள் இருவரும் கட்டட கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு பூஜா, அனு என்ற இரண்டு பெண் குழந்தைகளும், அஜய் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.
இந்நிலையில் அஜய் வழக்கம்போல் வீட்டினருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் அங்கு வந்த பாம்பு ஒன்று அவனை தீண்டியதாக தெரிகிறது. காலில் இருந்த ரத்த காயத்துடன் தனது தாயார் சந்திரலேகாவிடம் பாம்பு கடித்ததை குழந்தை மொழியில் கூறியுள்ளான். இதனை புரிந்துக்கொண்ட சந்திரலேகா உறவினர்களுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த செவிலியர்கள் மருத்துவர் வரவில்லை, அதுவரை காத்திருக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு வந்த மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு, குழந்தைக்கு எவ்வித பிரச்சனையுமில்லை, எதுவும் கடிக்கவில்லை எனக்கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர்கள் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது குழந்தை அஜய்க்கு கால்கள் வீங்கி, மயக்க நிலையை அடைந்தான். இதையடுத்து மீண்டும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, இங்கே சிகிச்சை அளிக்க முடியாது, எனவே மேல் சிகிச்சைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர் குழந்தை அஜய் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து போச்சம்பள்ளி அரசு மருத்துவர் அஜாக்கிரதையாக செயல்பட்ட காரணத்தால் குழந்தை அஜயின் உயிரிழப்பு நேர்ந்ததாக கூறி உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போச்சம்பள்ளி காவல் நிலையம் வந்து, மருத்துவரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்தனர்.