குற்ற வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பும் புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழக காவல் துறையில் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு நவீன திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கென காவல்துறையில் மாநில குற்ற ஆவணக்காப்பகத்தில் 'சிசிடிஎன்எஸ்' என்ற புதிய இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக எப்ஐஆர்களை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் திட்டம் கடந்த ஆண்டு முதல் அமுலுக்கு வந்தது. அதனையடுத்து ஆவணங்கள் தொலைந்து போனதற்கான 'மிஸ்சிங் சான்றிதழ்கள்' ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. காவல் நிலையங்களில் சென்று பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. 'சிசிடிஎன்ஸ்' என்ற போலீஸ் இணையதளத்தில் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து அடுத்த சில நொடிகளில் காணாமல் போகும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது.
அடுத்தபடியாக, குற்றவழக்குகளில் தொடர்புடைய சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பும் பணி இதற்கு முன்பு தபால் மூலம் நடந்து வந்தது. மேலும் அந்த நபர் விஐபியாக இருந்தால் போலீசாரே நேரில் சென்று அவர் இருக்கும் இடத்திற்கு சம்மனை அவரிடம் வழங்க வேண்டும்.இதுதான் விதிமுறையாக இருந்தது. மேலும் ஒரு வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது சாட்சிகளை தேடி அலைவது போலீசாரின் முக்கியப் பணியாக ஆகி விடுகிறது. சில வழக்குகள் முடிய குறைந்தபட்சம் 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகிவிடுகிறது. அப்படியிருக்கும் போது குற்றவாளிகள் மற்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள சாட்சிகள் முகவரி மாறி சென்று விடுகின்றனர்.
இதனால் போலீசார் அவர்களை தேடி அலைந்து கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராக மிகவும் மெனக்கட வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கியிருக்கும் முகவரிகளுக்கு தபால் மூலமும், நேரிலும் அனுப்பப்படும் பல சம்மன்கள் அவர்கள் அந்த முகவரியில் இல்லாததால் திரும்ப வந்து விடுகின்றன. இதனால் வழக்கு விசாரணைகள் மேலும் தாமதமடைகின்றன. போலீசாருக்கும் அலைந்து நேரம் வீண் விரயம் ஆகின்றது.
இது போன்ற பல்வேறு குறைபாடுகளை களையும் வகையிலும் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையிலும் சாட்சிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் சம்மன் அனுப்பும் திட்டத்தை அமல்படுத்துவது என்று டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில குற்ற ஆவணக்காப்பக கூடுதல் டிஜிபி சீமாஅகர்வால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சாட்சிகளுக்கு அனுப்பும் அந்த எஸ்எம்சில் வழக்கின் குற்ற எண், எந்த கோர்ட்டில் நடைபெறுகிறது, என்றைக்கு ஆஜராக வேண்டும் என்பன போன்ற பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சாட்சிகளின் செல்போன் எண்களை சேகரித்து வைத்து அவர்களது செல்போனுக்கு வழக்கு தொடர்பாக ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்கு முன்பே இந்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
போலீசார் 'CIPRUS' என்ற அப்ளிகேஷனுக்குள் சென்று கிளிக் செய்தால் கோர்ட் வழக்குகள், சாட்சிகளின் தொடர்பு எண்கள், குற்ற எண்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். அதனை எப்படி கையாள்வது என்பதற்கான பயிற்சிகள் தமிழகம் முழுவதும் உள்ள டிஎஸ்பி முதல் கான்ஸ்டபிள்கள் வரை இதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கோர்ட்டுக்கு செல்லும் கோர்ட்டாளி ஏட்டுகளுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பயிற்சிகளில் காவலர்கள் கலந்து கொண்டு 'எஸ்எம்எஸ்' பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளும்படி டிஜிபி சார்பில், சென்னை போலீஸ் கமிஷனர், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் காவல் துறையில் எப்ஐஆர் பதிவு செய்யும் சிபிசிஐடி, பொருளதாரக்குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து சிறப்புப் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.