சென்னையில் தற்போது நடக்கும் சிறிய அளவிலான கூட்டங்கள், நிகழ்ச்சிகள் போன்றவையே முக்கியமான கொரோனாவைரஸ் பரப்பும் ஹாட்ஸ்பாட்களாக மாறியுள்ளன. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி,
சில நாட்களுக்கு முன்பு தி.நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டார், இதில் ஆச்சர்யம் என்னவென்றால அவர் மார்க்கெட், கூட்டமுள்ள பகுதிகள் எதற்குமே செல்லவில்லை என்பதுதான். ஆனால் அவரது குடும்ப நண்பர் ஒரு இளங்கோவன் என்பவர் ஒரு கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபிறகு ராஜேஷின் வீட்டிற்கு வந்துள்ளார். இப்போது இளங்கோவன் குடும்பத்திலுள்ள `11 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளுக்குள் நடக்கும் சிறிய அளவிலான நிகழ்ச்சிகள் மற்றும் பண்டிகைகளால்தான் அதிக அளவிலான பரவல் நடக்கிறது என சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். “ மக்கள் விதிமுறைகளை மறந்து பார்ட்டிகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர். இப்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் திருமணம் அல்லது இறுதிசடங்குகள் கலந்துகொண்டவர்களாகவே இருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை, எச்சரிக்கையையும் மீறி ஆபத்தான விசயத்தை செய்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் “ ஷாப்பிங் காம்பளக்ஸ் போன்ற மக்கள் கூடும் இடங்களில் அதிக நேரம் செலவிடுவது ஆபத்தை விளைவிக்கும். பண்டிகை காலங்கள் நெருக்கத்தில் வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை செய்யவேண்டும். கூட்டங்களில் கலந்துகொள்வதை தவிர்க்கவேண்டும்” என கூறினார்.