சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவிற்கு உட்பட்ட கொந்தகை கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பாக ஆறாம் கட்ட அகழாய்வு பணியானது தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி முதல் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட பகுதிகள் அனைத்திலும் அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடையில் கொரோனா எதிரொலியால் ஊரடங்கு அமலானதால் சில வாரங்கள் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால் தற்போது மீண்டும் அகழாய்வுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.
ஏற்கெனவே கொந்தகையில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணி நடந்து வந்த நிலையில் அங்கு பத்திற்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி, மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் உட்பட ஏராளமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அடுத்தடுத்து கண்டறியப்பட்டது. அதனையடுத்து நேற்றைய தினம் கூடுதலாக மூன்று குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்டது. தற்போது அந்த எலும்புக்கூடுகளை மரபணு சோதனைக்காக அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகுந்த பாதுகாப்புடன் முகக்கவசம் கையுறை உட்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் அந்த எலும்புகளை எடுக்கும் பணி நடைபெற்ற நிலையில், அகழாய்வு குழியில் இருந்து எடுக்கப்படும் அந்த எலும்புகள் அனைத்தும் தொல்லியல் துறையினரால் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.
தமிழக தொல்லியல் துறையுடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதனடிப்படையில் கொந்தகை அகழாய்வு குழியில் கண்டறியப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் அனைத்தும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் உள்ள மரபணு சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு உரிய சோதனை செய்த பிறகே எலும்பு கூடுகள் குறித்த விவரங்கள் தெரியவரும் எனக்கூறுகின்றனர்.