சிவகாசியில் 3-ஆம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், அசாமைச் சேர்ந்த மோஜம் அலியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாமைச் சேர்ந்த மோஜம் அலி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள துணிப்பை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்திற்கு அண்மையில் பெயிண்ட் அடிப்பதற்காக சிறுமியின் தந்தை சென்றுள்ளார். அப்போது மோஜம் அலி உள்ளிட்ட அசாம் இளைஞர்களுடன் சிறுமியின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் வீட்டுக்கு அசாம் இளைஞர்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி காணாமல்போன திங்கட்கிழமை மோஜம் அலி, அரை நாள் விடுப்பில் சென்றதும், இரவு முழுவதும் தங்குமிடத்திற்கு திரும்பாமல், காலை நேரத்தில்தான் வந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மோஜம் அலியிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமி உடல் கிடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று வாக்குமூலம் பெற்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, மோஜம் அலியை கைது செய்த காவல்துறையினர், அவரை விருதுநகர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மோஜம் அலியை வரும் 6-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.