தவறான சிகிச்சை அளித்ததால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டதாகக் கூறி கிராமத்தினர் காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் அருகே மித்திரங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நடேசன் - சித்ரா தம்பதியர். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், சித்ராவிற்கு கடந்த 21 ஆம் ஆண்டு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சித்ரா, சிகிச்சைகாக காரைக்குடி தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப் பையில் பிரச்னை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால், சிகிச்சைக்கு பின்பு 6 மாதம் கழித்து மீண்டும் வயிற்றில் வலி ஏற்படவே தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கர்ப்பப் பையில் குழாய் ஒன்று இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடேசன் தம்பதியினர் மீண்டும் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்த முத்துக்குமார் மற்றும் ஸ்டாலின் ஆகிய மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து வயிற்றில் வலி அதிகமானதால் சித்ரா காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மித்திரங்குடி கிராம மக்கள் திரண்டு வந்து காரைக்குடி புதிய மருத்துவமனை வாயிலில் அமர்ந்து, தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.