சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பெரும்பாளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் கட்டடம் மற்றும் மேற்கூரை சரியில்லாததாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அப்பகுதியில் இன்று அதிகாலை முதல் மழைபெய்து வந்ததால், பள்ளியின் வகுப்பறைக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால், பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். மேலும், சாப்பிடக்கூடிய தட்டுகளை தண்ணீர் ஒழுகும் இடங்களில் வைத்தும் சமாளித்தனர். வகுப்பறைக்கு வந்து மழைநீரில் நனையாமல் இருக்க அங்கும் இங்குமாக ஓடுவதும், குடைபிடித்தபடியும் அமர்ந்துள்ளனர்.
இதுகுறித்து வேதனை தெரிவிக்கும் மாணவர்களின் பெற்றோர், வகுப்பறை கட்டடம் மோசமாக இருக்கிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்தும், அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது. பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்குள் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.