சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள் உட்பட 69 கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள சாலைக்கிராமத்தில் பெரிய ஊருணி, ஐந்து வட்டக்கிணறு பகுதிகளில் 26 ஏக்கரில் நீர்நிலை புறம்போக்கு இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகளை வைத்துள்ளனர். அரசியல் கட்சியினர் முதற்கொண்டு அலுவலகம் வைத்துள்ளனர். இதுதவிர அரசு சார்பில் பொதுக்கழிப்பறை, நூலகம், ஊராட்சி அலுவலகம், கிராம சேவை மையம், அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம் போன்றவையும் கட்டப்பட்டுள்ளன. மேலும் கோயில்களும் கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அக்கற்ற வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால் வருவாய்த்துறையினர் ஒரு சில கடைகளை மட்டும் தான் அக்கற்றியுள்ளதாக தெரிகிறது. அதேசமயத்தில் 11 பேர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தடை விதிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடும் செய்தனர். இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து மீண்டும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அப்போது 2 வாரங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, ஆக்கிரமிப்பில் உள்ள அரசு கட்டிடங்கள் உட்பட 69 கட்டிடங்களை இடிக்க இளையான்குடி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.