2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் ஐஏஎஸ் அதிகாரியாகவும் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்பட்ட வெ.இறையன்புவை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமித்தார். இறையன்பு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைச்செயலாளராக பொறுப்பேற்ற இறையன்பு நாளையுடன் (ஜூன் 30) ஓய்வு பெறுகிறார். இதன் காரணமாக புதிய தலைமைச் செயலாளரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு அரசு தேர்வுப் பட்டியலில் தமிழ்நாடு தொழில்முதலீட்டுத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளரான சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் அரசின் இறுதிப் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் 49 ஆவது தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். சிவ்தாஸ் மீனா தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற்றதும் பொறுப்பை மேற்கொள்வார். தற்போதைய தலைமைச் செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். சிவ்தாஸ் மீனா வகித்து வந்த நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் பணி கார்த்திகேயனுக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஓய்வு பெறும் இறையன்பு தமிழ்நாடு அரசின் ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானை சேர்ந்தவர். இவர் 1964 ஆம் ஆண்டு பிறந்தவர். சிவில் என்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற சிவ்தாஸ் மீனா ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். 1989 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் முதலில் காஞ்சிபுரத்தில் உதவி ஆட்சியராக பயிற்சியை தொடங்கினார். தொடர்ந்து கோவில்பட்டியில் உதவி ஆட்சியர், வேலூரில் கூடுதல் ஆட்சியர் என பணிபுரிந்துள்ளார். மருத்துவப் பணிகள் இயக்குநராகவும், பொதுத்துறை செயலாளராகவும், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் சிவ்தாஸ் மீனாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.