தொல்லியல் ஆய்வுக்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் இன்று தொடங்கி, ஆளில்லா விமானம் மூலம் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு இடத்தினை தேர்வுசெய்ய ஆய்வுப் பணிகள் தொடங்கின. தமிழ்நாட்டில் 2020- 21 ஆண்டிற்கான அகழாய்வு பணிகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் கீழடி, ஆதிச்சநல்லூரை போன்று 7 மாவட்டங்களில் உள்ள இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வுக்கான இடத்தைத் தேர்வுசெய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகளில் 18 கிலோ மீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 4 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.