சீர்காழி செய்தியாளர் - மோகன்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கீழ மூவக்கரை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று காலை திடீரென தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி, கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக தங்களது கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தராத மத்திய-மாநில அரசுகளைக் கண்டித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, தகவலறிந்து சென்ற சீர்காழி திமுக சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மீனவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முயற்சி செய்துள்ளார். அப்போது மீனவர்கள், "கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு ஏன்? வரவில்லை, எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராதது ஏன்? இப்பொழுது மட்டும் ஏன் வந்தீர்கள்” என சரமாரியாகக் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டாம் எனவும் திரும்பிச் செல்ல வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். மீனவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்காமல், சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் திரும்பிச் சென்றார்.