சீர்காழி அருகே நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் மதகடி என்ற இடத்தின் அருகே சென்றபோது 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பலாக வந்து அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.
இதையடுத்து பேருந்துக்குள் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனரை மாறி மாறி தாக்கிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் பேருந்தை எடுத்துக் கொண்டு சீர்காழி நோக்கி வேகமாக தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து அரசு பேருந்தை இளைஞர்கள் மறித்து தாக்கியது ஏன், அந்த இளைஞர்கள் யார், தாக்கப்பட்ட பேருந்தின் ஒட்டுனர், நடத்துனர் யார் என்பது குறித்தெல்லாம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இதுபற்றி எதுவும் தெரியாத நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் நடந்தவுடன், தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.