கோவை போத்தனூர் அருகே 4 பேரைக் கொன்ற காட்டு யானையை 2 மயக்க ஊசிகள் போட்டு வனத்துறையினர் பிடித்தனர்.
ஒரு மயக்க ஊசி போட்ட பின்னரும் யானை மயக்கமடையாததால், இரண்டாவது மயக்க ஊசி போட்டு கும்கி யானையின் உதவியுடன் வனத்துறையின் அந்த யானையைப் பிடித்தனர். பின்னர், அந்த யானையை லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தினர். இதையடுத்து அதிகாலை முதல் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. காட்டு யானைகளைப் பிடிக்க நகர்ப்பகுதிக்குள் கும்கி யானைகள் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. பிடிக்கப்பட்ட காட்டு யானை கோவை டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டுசெல்லப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை போத்தனூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் இன்று காலை வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த காயத்ரி என்ற 12 வயது சிறுமியை காட்டு யானை தாக்கிக் கொன்றது. தடுக்க முயன்ற அவரது தந்தை படுகாயமடைந்தார். இதேபோன்று வனப்பகுதிக்குள் சென்ற பழனிசாமி என்பவரும் யானையின் தாக்குதலில் உயிரிழந்தார். அதே பகுதியில் ஜோதிமணி, நாகரத்தினம் எனும் இரு பெண்களும் யானை தாக்கி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காட்டு யானை தாக்கி உயிரிழந்த நால்வரின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், காட்டு யானை தாக்கி உயிரிழந்த சிறுமி உட்பட நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். யானை தாக்கி காயமடைந்த மூன்று பேருக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.