தமிழக அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு வீடு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது.
பாடகி சின்மயி உட்பட 17க்கும் மேற்பட்ட பெண்கள் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். குறிப்பாக பாடகி சின்மயி வைரமுத்து மீது கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். வைரமுத்துவிற்கு எதிரான தனது குற்றச்சாட்டில் உறுதியோடு இருக்கிறார் பாடகி சின்மயி.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறிய பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாடகி புவனா சேஷன், அவரைப்போல் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்லவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாடகி புவனா சேஷன், ''வைரமுத்து மீது 17 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆனால் அவர்களில் நான்கு பேர் மட்டுமே தங்கள் முகத்தைக் காட்டி தங்கள் பெயரைச் சொல்லும் தைரியம் கொண்டவர்கள். துன்புறுத்தல் சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது மிகவும் கடினமான ஒன்றுதான்.
இதை சொல்வதன் நோக்கம் இளம் பாடகிகளின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. பாடகி சின்மயியின் துணிச்சல் என்னை வியக்க வைக்கிறது. வைரமுத்து மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காக சமூக வலைதளங்களில் அந்தப் பெண்ணை பலரும் வசைபாடினர். இது அவருக்கு நேர்ந்த கடினமான சூழல். இதை எதிர்கொள்ள முடியாமல்தான் பல பெண்கள் அவதிப்படுகின்றனர். வைரமுத்து மீது எந்த விசாரணையும் நடக்கப் போவதில்லை, நம்முடைய சிஸ்டம் அதை நடக்க விடாது. சின்மயியைப் போல் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் இதை வெளியில் சொல்லவேண்டும்'' என்று கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கு கோரிக்கை வைக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''பிரிஜ் பூஷணுக்கும், வைரமுத்துவுக்கும் விதிகள் வேறு வேறு கிடையாது. நமது நாட்டின் சாம்பியன்கள், மல்யுத்த வீரர்கள், நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள் பிரிஜ் பூஷணின் பெயரைக் கூறியுள்ளார்கள். அதேபோல தான் 17க்கும் மேற்பட்ட பெண்கள் வைரமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். உங்களுக்கும், உங்கள் கட்சிக்கு மிக நெருக்கமாக உள்ளவர். என்னையும் மற்றவர்களையும் அடக்க முயல்கிறார். பெண்களின் திறமைகள் மற்றும் கனவுகளை இதற்காக காவு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
எங்கள் அனைவரின் திறமையைவிட வைரமுத்து திறமை பெரிதொன்றும் இல்லை. உங்கள் கண் எதிரே இது நடக்கிறது. எனவே உரிய நடவடிக்கை எடுங்கள். அப்போது தான் தமிழகத்தில் உள்ள பணியிடங்களில் பெண்கள் பாதுகாப்பாக உணர முடியும். அவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் அவரது அரசியல் தொடர்புகளுக்காக வெளியே பேச பயப்படுகிறார்கள்'' என்று சின்மயி கூறினார்.