புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கே. ஆர். செல்வம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் உள்ள EI Corp எனும் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
தனது திருமணத்திற்கு வரும்படி செல்வம் தன் நிறுவன உரிமையாளருக்கு அழைப்பு விடுத்த நிலையில், நிறுவனத்தின் உரிமையாளர் கால்லின், திட்ட இயக்குனர் ஹம்மிங்க் மற்றும் திட்ட மேலாளர் டிம் ஆகியோர் புதுக்கோட்டைக்கு வருகை தந்தனர்.
இதனால் நெகிழ்ந்துபோன மணமகன் வீட்டார் வந்திருந்தவர்களுக்கு பரிவட்டம் கட்டி, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு தந்தனர்.
திருமணம் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற நிலையில், வந்திருந்த வெளிநாட்டவர்களை நலம் விசாரித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் அமைச்சர்.
இதனால் அகமகிழ்ந்தவர்கள், ஐ லவ் இந்தியா என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், மணமகனின் சொந்த கிராமமான கருக்காக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நன்கொடையும் வழங்க உள்ளனர்.
இந்நிலையில் வந்திருந்த சிங்கப்பூர்வாசிகளுடன், புதுக்கோட்டை குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.