சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று மாலை விமான நிலையத்தை முற்றுகையிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மத்திய தொழில் பாதுகாப்புபடையினர், காவல்துறையினர் என 300 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வருகிற 3-ம் தேதி திருச்சியில் விமானங்களை மறித்து போராட்டம் நடத்துவோம்" என அய்யாக்கண்ணு அறிவித்துள்ளார். "அ.தி.மு.க காவிரி உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கதக்கது. இருந்தாலும், அந்த போராட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் அ.தி.மு.க ஆதரவு அளிக்க வேண்டும்" எனவும் அய்யாக்கண்ணு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ரயில் மறியல் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இன்று பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.