மூணாறு அருகில் உள்ள மறையூரில் விவசாய பயிர் காவலில் இருந்த ஆதிவாசி பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறு அருகில் உள்ள மறையூரில் பாலப்பட்டிப் பகுதியை சேர்ந்த ஆதிவாசி பெண் சந்திரிகா. இவர் தனக்குச் சொந்தமான இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். இரவில் காட்டுப் பன்றிகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக சந்திரிகா அந்த இடத்தில் காவலுக்கு இருந்துள்ளார். இந்நிலையில் சந்திரிகாவின் சகோதரி மகன் காளியப்பன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், மாதவன் ஆகியோர் சந்திரிகாவை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மறையூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். சந்திரிகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தொடுபுழா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சந்தனமரக் கடத்தலில் மணிகண்டன் ஈடுபட்ட போது, அது குறித்து சந்திரிகா போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாகவும், அதற்கு பழி வாங்கவே அவரை துப்பாக்கியால் சுட்டக் கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.