வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், குறிப்பாக, மூதாட்டிகள் இனி சற்று நிம்மதியாக இருக்கலாம். காரணம், சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து கொலை செய்து கொள்ளையடித்த கொடூர குற்றவாளியை காவல்துறையினர் பிடித்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி சிவகாமசுந்தரி, கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வழக்கம்போல அவரது மகன் ஸ்ரீராம் உள்ளிட்ட அனைவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு இரண்டரை லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீராம், தாய் சிவகாமசுந்தரியை எழுப்பச் சென்றபோது அவர் அணிந்திருந்த 15 சவரன் நகைகள் பறிக்கப்பட்டு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
ஆதம்பாக்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடையுடன் வந்த நபர் ஒருவர், வீட்டிற்குள் சென்றது தெரியவந்தது. அந்த நபர் சென்ற வழித்தடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருவல்லிக்கேணிக்கு ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. ஆட்டோ பதிவெண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்து, அவர் இறக்கிவிட்ட இடத்தை கண்டுபிடித்த காவல்துறையினர், கேகே நகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரைக் கைது செய்தனர்.
கட்டட உள்கட்டமைப்பு வேலை செய்துவந்த சக்திவேல், அதில் கிடைப்பதை விட அதிக பணம் கிடைப்பதால், கொலை செய்து கொள்ளையடித்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளில் 2 கொலைகளை செய்திருப்பதாகக் கூறி அதிரவைத்திருக்கிறார் சக்திவேல். 2021இல் கேகே நகரில் வீட்டில் தனியாக இருந்த சீதாலட்சுமி என்ற மூதாட்டியை கொன்று கொள்ளையடித்ததாக வாக்குமூலத்தில் சக்திவேல் கூறியிருக்கிறார். கைது செய்யப்பட்டுள்ள சக்திவேலிடம் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், முதியவர்கள் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும். சந்தேகத்திற்குரிய நடமாட்டங்கள் குறித்து 100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் என்று கூறியுள்ள காவல்துறையினர், வயதானவர்கள் உள்ள வீடுகளை கண்காணித்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதாக தெரிவித்திருக்கிறார்கள்.