செய்தியாளர்: அன்பரசன்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவருக்கு பழைய வீடொன்று இருந்துள்ளது. அதை இடித்து கட்டுமான பணி மேற்கொண்டு வந்திருக்கிறார். தினமும் அந்த பணிகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். அப்படி நேற்று இரவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் அருகே நின்று, தனது நண்பர்களுடன் ஆம்ஸ்ட்ராங் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அவரது நண்பர்கள் வீரமணி, பாலாஜி ஆகியோருக்கும் முதுகு, காது மற்றும் காலில் வெட்டு விழுந்தது. கொலையாளிகள் தப்பியோடும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இச்சூழலில் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான புன்னை பாலா, அவருடைய நண்பர்கள் என அறியபப்டும் ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய எட்டு நபர்கள் அண்ணா நகர் காவல் நிலையத்தில், தாங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கூறி நள்ளிரவில் சரணடைந்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு (2023) பட்டினம்பக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா தன் அண்ணனின் கொலைக்காக பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பரும் பிரபல ரவுடி பாம் சரவணின் தம்பியுமான தென்னரசுவை, கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே, அவரது குடும்பத்தினர் கண்முன்னே ஆற்காடு சுரேஷ் தரப்பு கொலை செய்து வெறியாட்டம் போட்டது.
15 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி, பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் தென்னரசு கொலைக்கான பழிவாங்குதலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அச்சம்பவத்தின்போது ஆற்காடு சுரேஷூடன் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்த ரவுடி மாது (எ) மாதவன் பலத்த வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் அரக்கோணம் ஒற்றைக்கண் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி , நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார், அரக்கோணம் மோகன் ,நவீன், போஸ், சுரேஷ் , கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின், சென்னை ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி என 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கும்பலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்தான், நிதி உதவி, கொலையாளிகளை தங்க வைத்தது என மறைமுகமாக பல உதவிகளை செய்ததாக ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலையின் போது தாக்குதலுக்கு உள்ளாகி தப்பித்த மாது என்கிற பாக்ஸர் மாதவன் என்ற ரவுடியை ஜாம்பஜாரில் உள்ள தனது வீட்டில் அருகே நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது கடந்த ஜனவரி மாதம் 13ம் ஒரு கும்பல் கொலை செய்தது.
இது ஆற்காடு சுரேஷ் தரப்பை மேலும் கொதிப்படைய செய்தது. இதற்கும் ஆம்ஸ்ட்ராங்தான் பின்னணியில் இருந்துள்ளார் என ஆற்காடு சுரேஷ் ஆதரவாளர்கள் கருதி, ஆம்ஸ்டாங்கை கொலை செய்ய திட்டம் திட்டி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆற்காடு சுரேஷ் படுகொலையில், ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஆம்ஸ்ட்ராங் உதவியதாலேயே ரவுடி ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டதாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால் அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படவில்லை. இதனால் ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் முன்விரோதம் நீடித்து வந்துள்ளது. அதன்பிறகான கட்டப்பஞ்சாயத்துகளில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் புன்னை பாலா தரப்பினருக்கு மீண்டும் மீண்டும் மோதல் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டு நினைவு அஞ்சலி வருவதற்குள் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (05.7.2024) ஆற்காடு சுரேஷ் பிறந்த நாள். ஆற்காடு சுரேஷின் பிறந்த நாள் அல்லது நினைவு நாளுக்குள் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய அவர்கள் தரப்பு திட்டமிட்டு இருந்த நிலையில், “சுரேஷின் பிறந்தநாளிலே அதை செய்துவிட்டோம்” என போலீசாரிடம் ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
இது குறித்து ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலா போலீஸிடம் தெரிவிக்கையில், “எனது அண்ணனை கொலை செய்தது மட்டுமில்லாமல், என்னையும் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் மிரட்டியதால் எனது மனைவி பயத்தில் என்னை பிரிந்து சென்றுவிட்டார். இப்போது எனக்கு அண்ணனும் இல்லை, மனைவியும் இல்லை. இதனால், அவர்கள் என்னை கொல்வதற்கு முன்பாக அவரை கொன்று விட திட்டமிட்டேன். அதற்காக தென்னரசு கொலை வழக்கில் என்னோடு சிறையில் இருந்தவர்கள், என் அண்ணன் சுரேஷின் கிளப்பில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொலை செய்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேநேரம், நேற்று படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க்கின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறையும், ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவும் மூன்று தடவை எச்சரிக்கை விட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதனை செம்பியம் போலீசார் கண்டு கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில தினங்களாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை கும்பல் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. எப்போதும் ஆதரவாளர்களோடு இருக்கும் ஆம்ஸ்ட்ராங் தனியாக எப்போது இருப்பார் என்பதை கண்காணித்து கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் இந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் திரண்டு தொடர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.