“கண்ணாமூச்சி ஆடிவிட்டீர்கள்”.. சேகர் ரெட்டி வழக்கில் வருமான வரித்துறையை சாடிய நீதிமன்றம்!

“கண்ணாமூச்சி ஆடிவிட்டீர்கள்”.. சேகர் ரெட்டி வழக்கில் வருமான வரித்துறையை சாடிய நீதிமன்றம்!
“கண்ணாமூச்சி ஆடிவிட்டீர்கள்”.. சேகர் ரெட்டி வழக்கில் வருமான வரித்துறையை சாடிய நீதிமன்றம்!
Published on

4 ஆண்டுகளுக்கு 2,682 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தும்படி, சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். நிறுவனத்திற்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18ம் மதிப்பீட்டு ஆண்டுகளில் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தது. கடந்த 2016ம் ஆண்டு சேகர்ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தது.

அந்த ஆவணங்களில் இருந்து சேகர் ரெட்டி, மணல் கொள்ளைக்காக 247 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனம், அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இருந்து 217 கோடி ரூபாயும், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கத்திடம் இருந்து 155 கோடி ரூபாயும், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் இருந்து 197 கோடி ரூபாய் பெற்றுள்ளதும், பின்னர் இந்த தொகை, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கட்சி வேட்பாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, 2014-15 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்தின் வருமானம் 4 ஆயிரத்து 442 கோடி ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை, அதற்கு 2 ஆயிரத்து 682 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எஸ். மைனிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், வருமான மதிப்பீட்டின் போது பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த வருமான வரித்துறை, அதற்கு மாறாக செயல்பட்டு, நீதிமன்றத்துடனும், மனுதாரருடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், வருமான வரித்துறையின் உத்தரவுகளை ரத்து செய்து, குறிப்பிட்ட இந்த ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com