சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள சேகர் ரெட்டி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ளது.
சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர் ஸ்ரீனிவாசுலு ரெட்டி, ஆடிட்டர் பிரேம் குமார் ஆகியோர் வீடுகளில் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 131 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் 34 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகளாகும். மேலும் 177 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு, ஆடிட்டர் பிரேம் ஆகியோரை சிபிஐ கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி கைது செய்தது. மேலும் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி சிபிஐ கைது செய்யப்பட்டனர்.
சேகர் ரெட்டியிடம் விசாரணை செய்ததில் கைப்பற்றப்பட்ட 34 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மூலம் வந்ததாக ஒப்புக்கொண்டதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கப் பிரிவு 34 கோடி ரூபாயை முடக்கியது. இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள சேகர் ரெட்டி, முதலில் டெல்லியிலும், தற்போது சென்னையிலும் சிபிஐ அலுவலகத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில், கீரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தில் சேகர் ரெட்டி ஆஜராகி கையெழுத்திட்டபோது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தினர்.