“நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார்” - செயற்கைக்கோள் திட்ட இயக்குநரான தமிழர்! பெற்றோர் நெகிழ்ச்சி!
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் நேற்று காலை விண்ணில் ஏவப்பட்டது. இதன் மூலம் சிங்கப்பூர் நாட்டின் 7 செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன.
இதில், சிங்கப்பூர் என்.டி.யு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சண்முகசுந்தரம் என்பவர் வடிவமைத்த 3 நானோ செயற்கைக் கோள்களும் அடங்கும். ஏர்காப்ஸ், வேலாக்ஸ் - ஏ.எம், ஸ்கூப்-2 ஆகிய செயற்கைக் கோள்களை அவர் வடிவமைத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் அய்யப்ப நாயக்கன் பேட்டையைச் சேர்ந்த இவர், சென்னை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜனியரிங் பட்டமும், செயற்கைக் கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். சண்முகசுந்தரம் வடிவமைத்த செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்டதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிராம மக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தங்கள் மகன் நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளதாக அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.