வங்கி நடத்துவதற்கு அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட வங்கிகள் முடக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். சந்திப்பில் அவர் பேசியபோது, ’’மத்திய குற்றப்பிரிவு போலீசார் பல வழக்குகளை பிடித்துள்ளனர். ரிசர்வ் வங்கியில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதன்படி விசாரித்து பார்த்ததில் வங்கி நடத்துவதற்கு உரிய அனுமதி இல்லாமல் ஆர்.ஏ.எஃப்.சி என்ற பெயரில் ஒரு வங்கி செயல்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டது. அங்கு சோதனை நடத்தி முக்கியமானவர்களை கைதுசெய்துள்ளோம். இந்த வங்கிகள்மூலம் 3 ஆயிரம் வங்கிக்கணக்குகளை தொடங்கி உள்ளது தெரியவந்தது.
குறிப்பாக மதுரை, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், ஈரோடு, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் இயங்கி வந்தது தெரிய வந்தது. RBI அனுமதி பெற்றது போல் சான்றிதழ் தயார் செய்து போலியாக வங்கி நடத்தி வந்துள்ளனர். மேலும், ஐசிஐசிஐ-யிடமிருந்து கிரெடிட் கார்டுகளை வாங்கி, அதன்மீது ஸ்டிக்கர் ஒட்டி போலி கிரெடிட் கார்டுகளையும் வழங்கியது தெரியவந்தது. போலி வங்கியில் இருந்து 56 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலியாக 8 வங்கிகள் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது’’ எனக்கூறினார்.