நான்கரை மாத தொடர் பயிற்சிக்கு பிறகு வளர்ப்பு யானையாக மாற்றப்பட்ட சங்கர், மரக்கூண்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தந்தை மகன் உட்பட 3 பேரை கொன்ற சங்கர் என்ற காட்டு யானையை யாரும் மறந்திருக்க முடியாது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சங்கர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மரக் கூண்டில் வைத்து சங்கர் யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நான்கரை மாத தொடர் பயிற்சியால் சங்கர் வளர்ப்பு யானையாக மாறி இருக்கிறது.
இந்த நிலையில் சங்கர் யானை மரக் கூண்டை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டது. யானைப் பாகன்கள் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து யானையை வெளியே கொண்டு வந்தனர். வெளியே வந்த சங்கர் எந்தவித ஆக்ரோஷரத்தையும் வெளிப்படுத்தாமல் இயல்பான யானைகளைப் போல நடந்து வந்தது. இனி வெளிப்பகுதியில் கட்டி வைக்கப்படும் சங்கர் யானைக்கு அடுத்தகட்ட பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. அதன்பிறகு கும்கி யானையாக மாற்றுவதற்கான பயிற்சியை சங்கர் யானைக்கு அளிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.