பாலியல் தன்மையை காரணம் காட்டி ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை மறுக்கப்படுவதாக திருநங்கை ஷானவி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி (வயது 26). பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடந்த 2010ம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியாற்றி வந்திருக்கிறார் ஷானவி. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பணிபுரிந்த பின்னர், முறையான பாலியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார். பின் தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்திருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் ஏர் இந்தியாவில் இருந்து மீண்டும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். ஒரு முறை.. இருமுறை அல்ல.. மொத்தமாக நான்கு முறை.. ஆனால் நான்கு முறையும் வேலைக்கு தேர்வானவர்களின் இறுதிப்பட்டியலில் ஷானவி பெயர் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் ஏமாந்து போன ஷானவி இறுதியாக ஏர் இந்தியா, மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சத்திடம் இது குறித்து முறையிட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் அளித்த பதில் ஷானவியை மேலும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. எங்களது ஆட்சேர்ப்பு கொள்கை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மட்டுமே தவிர திருநங்கைகளுக்கு அல்ல என கைவிரித்துவிட்டனர்.
பாலியல் தன்மையை காரணம் காட்டி எனக்கு கிடைக்க வேண்டிய வேலை மறுக்கப்படுகிறது. இதில் தகுந்த நடவடிக்கை வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் ஷானவி மனுத்தாக்கல். உச்சநீதிமன்றமும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் மாதம் 17 தேதி உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.