அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணாக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள வண்ணாமடை பகுதி தமிழர்கள் வசிக்கும் பகுதி என்பதால் இங்கு செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் முத்தலீஃப் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தப் பள்ளி மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பல முறை மாணவ மாணவிகள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நல வாரியத்திற்கு புகார் அனுப்பியும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தலீஃப் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோபாலபுரம்-பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து தகவலறிந்து வந்த வண்ணாமடை காவல்துறையினர், மாணவ, மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். பேச்சு வார்த்தை சமாதானம் ஆகாமல் தொடர்ந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையெடுத்து தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு நெருங்கி வரும் வேளையில் அங்குள்ள ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு வகுப்புகளுக்கு வராததால் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது.